தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக், நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் செப். 30- ஆம் தேதி ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, உடையாப்பட்டியில் உள்ள சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) சோதனை நடத்தினர். இங்கு ஜெயகவுரி என்பவர் ஆர்டிஓ-வாக பணியாற்றி வருகிறார்.
இந்த அலுவலகத்தில் புதிய வாகனம் பதிவு செய்தல், தகுதி சான்றிதழ் வழங்குதல், பழைய வாகனம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக லஞ்ச வேட்டை நடத்தப்படுவதாகப் புகார்கள் சென்றதை அடுத்து, இந்த சோதனை நடத்தப்பட்டது.
லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் நரேந்திரன், ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் காவலர்கள் செப். 30- ஆம் தேதி மாலை 04.00 மணியளவில், சேலம் கிழக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் நுழைந்து சோதனையைத் தொடங்கினர்.
ஆர்டிஓ ஜெயகவுரி, போக்குரவத்து ஆய்வாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்ட பத்து பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். நள்ளிரவு 12.30 மணியளவில் சோதனை முடிந்தது. இந்த சோதனையில், கணக்கில் வராத 60,700 ரூபாய் ரொக்கம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அதேபோல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆர்டிஓ அலுவலகத்திலும் சோதனை நடந்தது. ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையில் 7 பேர் குழுவினர் இச்சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 24 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இரவு 11.30 மணி வரை இந்த அலுவலகத்தில் சோதனை நடந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சியில் 2020 - 2021ம் நிதியாண்டில், கரோனா தடுப்புப் பணிகளுக்காக சுகாதார பொருள்கள், குடிநீர் பயன்பாட்டுக்கான உபகரணங்கள், மின்னணு பொருள்கள் 45 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளதும், அதில் முறைகேடு செய்திருப்பதாகவும் புகார்கள் சென்றன.
இதையடுத்து, தர்மபுரி லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் பழனிசாமி தலைமையில், அரூர் பேரூராட்சி செயல் அலுவலர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அங்குள்ள ஆவணங்களை சரிபார்த்தனர். சுமார் 5 மணி நேரம் அங்கு சோதனை நடந்தது. பொருள்கள் கொள்முதல் செய்தது தொடர்பான கணக்குப் பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையின் திடீர் சோதனையால் லஞ்சத்தில் திளைக்கும் அரசு ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.