மதுரை அருகே டாஸ்மாக் கடையில் மது அருந்திய ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மதுரை அருகே உள்ள கிடாரிப்பட்டியை சேர்ந்தவர் பனையன். பனையன் அதே ஊரில் உள்ள நாச்சியம்மன் கோவிலில் பூசாரியாகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் இரண்டாம் தேதி பனையனும் அதே ஊரைச் சேர்ந்த கருத்தமொண்டி என்பவரும் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்துள்ளனர். அப்பொழுது திடீரென இருவரும் மயங்கி விழுந்தனர்.
உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பனையன் உயிரிழந்தார். தொடர்ந்து தீவிர சிகிச்சையில் கருத்தமொண்டி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் உயிரிழந்த இருவருக்கும் மது வாங்கிக் கொடுத்தது உப்போடைப்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரணன் என்பது தெரிய வந்தது.
அவரைப் பிடித்து விசாரித்ததில் பனையனின் உறவினரான வீரணனின் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். அந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு பனையன் வரவில்லை. பூசாரியான அவர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் வர முடியாது என கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த வீரணன் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து பனையனுக்கு கொடுத்ததாகவும் அதனை அருந்திய பனையன் மற்றும் கருத்தமொண்டி ஆகிய இருவருக்கும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து அதில் பனையன் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.