கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள பாலி எனும் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் அதே ஊரைச் சேர்ந்த சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்தப் பள்ளியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குறித்து காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில், ஆசனூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மேற்படி பள்ளி மாணவ மாணவிகளுக்கு சத்து மாத்திரை வழங்கியுள்ளனர். அந்த சத்து மாத்திரை சாப்பிட்ட குழந்தைகளுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக புறப்படுகிறது. இந்தத் தகவல் அறிந்த கிராம மக்கள் பிள்ளைகளின் பெற்றோர்கள் உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் குவிந்தனர். குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சத்து மாத்திரை சாப்பிட்டதால் மயக்கம் வந்து இருக்கலாம்; பயப்படும்படி ஒன்றுமில்லை எனத் தெரிவித்துள்ளார். சில மணி நேரத்தில் குழந்தைகள் அனைவரும் குணமாயினர். இந்தச் சம்பவம் கேள்விப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் கலைச்செல்வன் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி மகேஷ், இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டனர்.