Skip to main content

வேட்டி, சட்டை, புடவை, தடுப்பூசி; உதயநிதி தொகுதியில் அசத்தல் பொங்கல்!

Published on 16/01/2022 | Edited on 16/01/2022

 

தி.மு.க.வின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், “எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் பாரபட்சமில்லாத ஆட்சியை வழங்குவோம்” என்றார். அவரது மகனும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி, இதனை மெய்ப்பிக்கும் வகையில் தனது தொகுதி வாக்காளர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கி வருகிறார்.

 

தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மாதத்திற்கான மளிகைப் பொருட்களை வழங்கினார் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி. வீடு வீடாகக் கணக்கெடுக்கப்பட்டு மளிகைப் பொருட்களை வழங்கி வந்த நிலையில், கரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடுவது தீவிரப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, தொகுதியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி விழிப்புணர்வுப் பரப்புரையை மேற்கொண்டார் உதயநிதி. குறிப்பாக, எளிய மக்கள் வாழும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

 

ஒவ்வொரு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. வீட்டில் உள்ளவர்கள் எத்தனை பேர், அவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர், தடுப்பூசி போட்டுக் கொண்டவர் எத்தனை பேர், எந்த தேதியில் போடப்பட்டது என்ற விவரம் அனைத்தும் வீட்டு வாசலில் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொண்ட குடும்பத்தினருக்கு மளிகைப் பொருட்கள் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. சேப்பாக்கம் தொகுதியின் நடைமுறையைப் பார்த்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது பற்றி அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டுப் பேசினார். வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் திட்டமும் மாநில அளவில் அறிவிக்கப்பட்டது.

 

தற்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஏறத்தாழ 95% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்கள். 70%க்கு மேல் இரண்டாவது டோஸ் போட்டுள்ளனர். 1 லட்சத்து 30 ஆயிரம் மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில், பொங்கல் விழாவையொட்டி கட்சி நிர்வாகிகளுக்கும், திமுகவினருக்கும் பொங்கல் பரிசுகளை வழங்குமாறு மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுகவினர்களான ஏறத்தாழ 5000 பேருக்கு பொங்கலுக்கான துணிமணிகளுடன் காலண்டரையும் வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி. அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்தவர், தொகுதி வாக்காளர்களிடமும் அந்த மகிழ்ச்சியை எதிர்பார்த்து, அனைவரது குடும்பத்தினருக்கும் புடவை, வேட்டி, சட்டை வழங்க முடிவு செய்தார்.

 

வாக்காளர்களின் குடும்பங்களுக்கு கட்சி நிர்வாகிகள் முன்கூட்டியே டோக்கன் வழங்க, அதனடிப்படையில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் சேப்பாக்கம் பகுதியில் மூன்று வார்டுகள், திருவல்லிக்கேணி பகுதியில் மூன்று வார்டுகள் என உதயநிதியே நேரடியாகச் சென்று பொருட்களை வழங்குகிறார். இல்லத்தரசிகளானப் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

 

பொங்கல் பரிசு பெறுபவர்களிடம், “தடுப்பூசி போட்டாச்சா?” என்று கேட்டு, விழிப்புணர்வைத் தொடர்ந்து மேற்கொள்கிறார் உதயநிதி. தற்போது போடப்பட்டு வரும் 15-18 வயதுள்ளவர்களுக்கான தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி பற்றியும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. மகிழ்ச்சியும் விழிப்புணர்வும் சேர்ந்து பொங்குகிறது உதயநிதி தொகுதியில்.

 

 

சார்ந்த செய்திகள்