Skip to main content

முதல்வர் எங்களுக்கு உதவ வேண்டும்... குட்டியானையில் ஏறி கல்லூரி போகும் மாணவிகள் குமுறல்!

Published on 25/10/2021 | Edited on 26/10/2021

 

ரக


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் நகரப் பேருந்துகள் பெண்கள் பயணக்கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்று அறிவித்தார். அதனால் அனைத்து நகரப் பேருந்துகளும் விலையில்லா பேருந்துகளாகிவிட்டது. அதே நேரத்தில் கல்லூரி செல்லும் மாணவிகள், நிறுத்தப்பட்ட நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்காததால் குட்டியானை எனப்படும் நான்கு சக்கர மினி டிரக் (TATA Ace) வாகனத்தில் ஏறி தினசரி கல்லூரி செல்லும் அவல நிலையும் தமிழகத்தில் தான் நடக்கிறது. 

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியிலிருந்து திருவோணம் வழியாக ஒரத்தநாடு செல்லும் பிரதானச் சாலையில் பயணித்த போது தான் அந்த ஆபத்தான பயணத்தை நம்மால் காணமுடிந்தது. குட்டி யானை வாகனங்களில் நாற்று கட்டுகளை ஏற்றிச் செல்லும் பல வாகனங்கள் முந்திச் செல்ல அடுத்து நடவுக்குச் செல்லும் பெண்களை ஏற்றிக் கொண்டு சில நான்கு சக்கர மினி டிரக் (TATA Ace) வாகனங்கள் சென்றது. அடுத்த சில நிமிடங்களில் துக்க நிகழ்வுக்காக மாலைகளுடன் ஒருநான்கு சக்கர மினி டிரக் (TATA Ace) வாகனம் சென்றது, அதில் ஆண்களும் பெண்களும் சென்றனர்.

 

இந்தக் காட்சிகளை பார்த்த சில நிமிடங்களில் ஒரு நான்கு சக்கர மினி டிரக் (TATA Ace)  வாகனத்தில் சுமார் 50, 60 மாணவிகள் பேக்குகளுடன் நின்று கொண்டிருக்க வாகனம் நம்மை முந்திச் சென்றது. வேலைக்கும் துக்கத்துக்கும் குட்டியானை வண்டியில போறாங்க; மாணவிகள் ஏன் இப்படி போறாங்க என்ற கேள்வி எழ அந்த வாகனத்தை பின் தொடர்ந்தோம். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலைக்கல்லூரி முன்பு நின்றது அந்த குட்டியானை வாகனம். அதிலிருந்து மொத்த மாணவிகளும் கீழே இறங்கி நேரமாச்சு என்று சொல்லிக் கொண்டே வேக வேகமாக கல்லூரிக்குள் ஓடினார்கள். 

 

அதில் சில மாணவிகளை நிறுத்தி இப்படி சரக்கு வாகனங்களில் பயணிக்க கூடாது. சமீபத்தில் கூட அதாவது அக்டோபர் 7 ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பரமநகரில் இருந்து பரவாக்கோட்டைக்கு நடவுக்காக ஒரு டாடா ஏசிஇ-ல் போனவர்கள் அந்த வாகனம் கவிந்து அதில் போன 15 பேரும் படுகாயமடைந்தார்கள். சிலர் இன்னும் சிகிச்சை முடிந்து வீடுவந்து சேரல. அதனால படிக்கிற நீங்கள் இது போன்ற சரக்கு வாகனத்தில் பயணிக்கலாம்? போலீஸ் பிடிச்சு அபராதம் விதிப்பாங்க. சம்மந்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் கூட செய்வாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. இடை மறித்த சில மாணவிகள்.. அண்ணா நீங்க சொல்று எல்லாம் சரி தான்.

 

நாங்க செய்றது ஆபத்தான சட்டத்திற்கு புறம்பான பயணம் தான் ஒத்துக்கிறோம். ஆனால் ஏன் இப்படி ஆபத்தான பயணம் செய்றோம்னு தெரியுமா? ஒரத்தநாடு கலைக்கல்லூரியில் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தினசரி வந்து போற சுமார் 4 ஆயிரம் மாணவிகள் படிக்கிறோம். கரோனா காலத்துக்கு முன்னால எங்க ஊருக்குள்ள டவுன் பஸ் வரும் ஏறி கல்லூரிக்கு வருவோம். ஆனா கரோனா காலத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்ட பிறகு கிராமங்களுக்குள்ள டவுன் பஸ்கள் சரியா வருவதில்லை. அதிலும் டவுன் பஸ்ல பெண்களுக்கு இலவச பயணம் என்று முதலமைச்சர் அறிவித்த பிறகு சுத்தமாவே டவுன் பஸ் வரல. எங்கள் வசதிக்காக முதல்வர் அறிவிச்ச திட்டத்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் முடக்கி அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துறாங்க.

 

நேரத்துக்கு கல்லூரி வரனும் அதனால் எல்லா மாணவிகளும் ஆளுக்கு 10, 20 ரூபாய் சேகரித்து தினசரி லோடு ஆட்டோவுல தான் வந்து போறோம். பஸ் விடச் சொல்லி பல முறை போராடியும் பலனில்லை. இது தமிழக முதல்வர் கவனத்துக்கு போனால் தான் நடவடிக்கை இருக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.  இதில் பலரும் முதல் பட்டதாரிகளாக படிக்க வரும் பெண்கள். போக்குவரத்து வசதி இல்லாத இதே நிலை நீடித்தால் பல நூறு மாணவிகளின் பட்டதாரி என்னும் கனவு படிப்பு கனவாகவே போய்விடும். தமிழக அரசு மாணவிகளின் நலன் கருதி கறம்பக்குடிக்கு மற்ற பல கிராமங்களுக்கும் பழைய நகரப் பேருந்துகளை இயக்கினால் நல்லது; கல்லூரி செல்லும் மாணவிகள் பெரும் பயனடைவார்கள்...

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

கர்ப்பமாக்கிய காதலன்; உயிருக்குப் போராடும் மாணவி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
college girl health was affected due to having pregnant

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது பேத்தி கலா(17)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெற்றோரை இழந்த இவர் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் திண்டுக்கல் காந்திகிராம் பகுதியில் உள்ள ஒரு  கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கலாவை பார்ப்பதற்காக அவரது அத்தை கல்லூரி விடுதிக்குச் சென்றார். அப்போது அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் கலாவை அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு கலா கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலாவின் அத்தை, கலாவிடம் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது, திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை பகுதியைச் சேர்ந்த தனது காதலன் ராம்குமார் தான் தனது கர்ப்பத்துக்கு காரணம் எனத் தெரிவித்தார். இந்த வாலிபர் காந்திகிராம் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில், கலாவை அவர் தனது அண்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவருடன் தனிமையில் இருந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து கலாவின் கர்ப்பத்தை அவரது அத்தை கலைக்க முடிவு செய்தார். அதன்படி திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை இரு தினங்களுக்கு முன்பு சேர்த்தார். பின்னர் மருத்துவர்கள் அந்த மாணவிக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். ஆனால் பல மணி நேரமாகியும் உதிரப்போக்கு நிற்கவில்லை.  அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அந்த மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் அரசு மருத்துவமனை வரை சென்றதால் போலீஸ் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நளினி மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான ராம்குமார், கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்த அவரது அத்தை  மற்றும் கர்ப்பத்தை கலைத்த டாக்டர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.