தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. ஞாயிறு பொதுமுடக்கம், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, இரவு நேர ஊரடங்கு, கோயில்களை விடுமுறை நாட்களில் மூடுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்திருந்த நிலையில், கரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு மேற்கூறிய அனைத்து கட்டுப்பாடுகளும் சில நாட்களுக்கு முன்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. அதேபோல், இன்று முதல் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு கைகளில் கிருமி நாசினி போடப்பட்டு, பிறகு பள்ளி வகுப்பறைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பல இடங்களில் மாணவர்கள் வெகு நாட்கள் கழித்து பள்ளிக்கு வருவதால் பூக்கள் கொடுத்து மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.