விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், மக்கள் பணியில் மிகுந்த அக்கறையுடன் பரபரப்பாகச் செயல்பட்டு வருபவர். ஆசிரியர் தினத்தையொட்டி அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. அந்தவிருது வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்தவிழாவில் விருது பெற்ற ஆசிரியர்கள்; கெட்டார் பள்ளித் தலைமை ஆசிரியர் பெருமாள், கண்டாச்சிபுரம் கணினி பயிற்சியாளர் குரு, மழவந்தாங்கல் நடராஜன், அனந்தபுரம் முருகன், திருவெண்ணைநல்லூர் சிவபாலன், வாணியம் பாளையம் சரசு, ஆனங்கூர் மாலினி தேவி, கிளியனூர் ரேகா, செஞ்சி அப்ரோஸ்கான் ஆகிய ஆசிரியர்களுக்கு ஆட்சியர் மோகன் விருது வழங்கினார்.
இவ்விழாவில் பேசிய ஆட்சியர் மோகன், “அரசு வழிகாட்டுதலின்படி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட பள்ளிகளில் நான் சென்று கள ஆய்வு மேற்கொண்டபோது மாணவ - மாணவிகளிடம், ‘நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருவதை எப்படி உணர்கிறீர்கள்’ என்று கேட்டேன். அவர்களோ, ‘ஆசிரியர்களை, எங்களுடன் படிக்கும் சக நண்பர்களை நேரில் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ எனக் கூறினார்கள்.
ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைத்துள்ள மரியாதை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கல்வியில் பின் தங்கிய மாவட்டம் என்ற அடைமொழியை ஆசிரியப் பெருமக்கள் நீக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். கல்வியில் புதிய வழிமுறைகளைப் பயன்படுத்தி மாணவர்களின் அறிவுத் திறமையை மேம்படுத்த வேண்டும். அவர்களை பல்வேறு சாதனைகள் படைக்கும் வெற்றியாளர்களாக உருவாக்கி சமூகத்திற்கு வழங்க வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்” என்று கூறினார்.
இதையடுத்து விருதுபெற்ற 9 ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வித் துறை சார்பாக கரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2,05,200 ரூபாய்க்கான காசோலையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா ஆட்சியரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சங்கர், துணை ஆட்சியர் ரூபினா உட்பட பல்வேறுத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். எளிமையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்திருந்தது என விருது பெற்ற ஆசிரியர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் தெரிவித்தனர்.