திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும், ஊரகவளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியை ஆத்தூர் தொகுதியில் உள்ள கிராம ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் நேரில் சந்தித்து தங்களின் பிள்ளைகள் உயர்கல்வி கற்பதற்கான கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற்ற வண்ணம் உள்ளனர்.
ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கன்னிவாடியில் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்க கோரிக்கை மனு கொடுத்த போது அதைப் பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய அமைச்சர், “கிராமப்புற மாணவியர்களின் நலன் கருதி அவர்களும் உயர்க்கல்வி கற்க வேண்டும் என்ற நல்நோக்கோடு ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அரசு சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வரப்பட்டது. இக்கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் கல்வி கற்கும் நிலையை உருவாக்கி உள்ளேன்.
ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கன்னிவாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ப்பதற்கு யார் சிபாரிசும் தேவை இல்லை என்றதோடு மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கும் அளவிற்கு கல்லூரிகள் செயல்பட்டுவருகிறது.
அடுத்த வருடம் முதல் ஆத்தூர் ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கல்லூரியில் கூடுதலாக சுமார் ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து படிக்கும் அளவிற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆத்தூர் ஒன்றியம் மட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டம் மற்றும் தமிழகத்தில் எந்த மூலையில் இருந்தும் வந்து இங்கு சேர்ந்து படிக்கும் அளவிற்கு ஆத்தூர் ஒன்றியத்தில் கூட்டுறவு துறை சார்பாக செயல்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிதரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
அத்தோடு திராவிட மாடல் ஆட்சி நாயகன் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் வந்த கழகத்தலைவர், தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த புதுமைப்பெண் திட்டம் மாணவியர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவியர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது” என்று கூறினார்.