தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (26/11/2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதைத் தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதனை மேற்கோள் காட்டி, ட்விட்டரில் கமெண்ட் செய்த பள்ளி மாணவர் ஒருவர், ‘சார் விருதுநகர் மாவட்டத்திலும் மழை பெய்கிறது’ என வேண்டியவாறு, அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டியை டேக் செய்திருந்தார்.
அந்த மாணவருக்கு ட்விட்டரில் பதிலளித்த மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி, "விடுமுறைக்காக உங்கள் தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கு நன்றி. நம்முடைய மாவட்டத்திலும் கனமழை பெய்துவருகிறது. எனவே, பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (26/11/2021) மட்டும் விடுமுறை. இந்த விடுமுறையைப் பயன்படுத்தி வீட்டுப்பாடத்தை முடியுங்கள்!! ஆசிரியர்கள் சரிபார்ப்பார்கள்! பாதுகாப்பாக இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் என அனைவரும் தங்களின் அறிவிப்புகளை ட்விட்டர் வாயிலாக வெளியிட்டுவருகின்றனர். மேலும் சாமானியர்களின் கேள்விகளுக்கும், அவர்கள் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக பதிலளித்துவருகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து நன்மைகள் கிடைத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.