கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு அருகே உள்ள பி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் கவுதம்(18). இவர் கடந்த 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 278 மதிப்பெண் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி வேதியியல், இயற்பியல், கணக்கு பதிவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட நான்கு பாடப்பிரிவுகளில் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த மாணவர் கவுதம் நேற்று கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், 'உரிமை வேண்டும் உரிமை வேண்டும்!', 'எனக்கான கல்வி உரிமை வேண்டும்', 'என்னை விட குறைந்த மதிப்பெண் மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கொடுக்கும்போது எனக்கு இடம் கொடுக்க மறுப்பதற்கான காரணத்தை கூறு!' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினார்.
இதுகுறித்து அவர், "நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். எனது அப்பா விபத்தில் இறந்து விட்டார். தாயார் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் கடலூரில் ஒரு காய்கறி கடையில் கூலி வேலை செய்து எங்களை படிக்க வைத்து வருகிறார்.
நான் 12-ஆம் வகுப்பு தேர்வில் 278 மதிப்பெண் எடுத்து கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி படிப்பதற்காக விண்ணப்பித்து இருந்தேன். ஆனால் எனக்கு எந்த பிரிவிலும் இடம் கிடைக்கவில்லை. ஆனால் என்னை விட குறைவான மதிப்பெண் பெற்ற எனது நண்பர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அதனால்தான் நான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு இடம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன்" என்றார்.
அதையடுத்து பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவரிடம் காவல்துறையினரும், கல்லூரி நிர்வாகம் சார்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கல்லூரி முதல்வருக்கு மனு கொடுத்தால் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மாணவர் கவுதம் போராட்டத்தை கைவிட்டார்.