திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வின்நகர் பகுதியில் திருவெறும்பூர் சார் பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. தினமும் திருவெறும்பூர் வட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்வர். நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான அளவில் பத்திரங்கள் பதியப்படும். இன்று காலை 10 மணியில் இருந்து சில மணி நேரங்கள் வரை பத்திரங்கள் எதுவும் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து பத்திரப்பதிவு அலுவலக உயர் அதிகாரியிடம் கேட்டபோது, பதிவு கட்டணமான பத்திரப்பதிவு கட்டணம், கணினி கட்டணம், சப்டிவிஷன் கட்டணம், குறுந்தகடு கட்டணம், குறைவு முத்திரை தீர்வை கட்டணம் ஆகியவற்றை பொதுமக்கள் எஸ்.பி.ஐ வங்கி மூலம் நெட்பேங்கிங் வழியாக செலுத்தி வருகின்றனர். அதற்கான ரசீது வெளியான பிறகுதான் அதன் அடிப்படையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அவர்களுக்கு பதிவு செய்து தரப்படும். ரசீது எடுக்கமுடியாமல் பத்திரம் பதியமுடியவில்லை என்று கூறினார்.
இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், நாங்கள் நல்ல நேரம் பார்த்து பதிவு செய்வதற்கு வந்தால், இது மாதிரியான பிரச்சனைகளால் மன உளைச்சலும், பண விரயமும் ஏற்படுகின்றது என்றனர். ரசீது வராத காரணத்தினால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.