சிதம்பரம் மேலவீதியில் கடலூர் மாவட்ட விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் மணல்மேடு சரவணன், சிவாயம் மணிவண்ணன், வடக்குமாங்குடி நீலமேகம், சிறுகாலூர் சிற்றரசு, வல்லம்படுகை வசந்தன், வடமூர் ரெங்கநாயகி, அரியகோஷ்டி நடராஜன், செங்கமேடு அருள்பிரகாசம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 2020-2021 ஆம் ஆண்டு நிவர் மற்றும் புரவி புயல், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படவேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். வருவாய் அடங்கல் ஆவணத்தை நிபந்தனையின்றி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும்.
2021-2022 ஆம் ஆண்டு சம்பா சாகுபடிக்குத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடனை உடனே வழங்க வேண்டும். பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த அனைத்து பரிவர்த்தனை சொத்துக்களை இணையதள பதிவின் அடிப்படையில் உடனடியாக பட்டா மாற்றம் செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் வரும் 11-ஆம் தேதி காலை சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் எனத் தீர்மானம் நிறைவேற்றினர்.