கோவையில் பல இடங்களில் திருடி அதன்மூலம் சொகுசாக வாழ்ந்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் பல நாட்களாக செல்போன் பறிப்பு, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணனின் உத்தரவின் பேரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கோவை பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகே முதியவர் ஒருவரை சுற்றிவளைத்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அந்த கும்பலை சுற்றிவளைத்து கைதுசெய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் கோவை பகுதியில் தங்கியிருந்து திருடிவிட்டு சொந்த மாநிலமான ஜார்கண்டுக்கு சென்று சொகுசாகப் பணத்தை செலவழித்துவிட்டு மீண்டும் கோவை வந்து தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் கைதான 7 பேரில் 4 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மற்ற 3 சிறுவர்களும் கண்காணிப்பு பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.