கரோனாவால் உயிரிழந்த டாக்டர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரணதொகையை இதுவரை வழங்கவில்லை என இந்திய மருத்துவ கவுன்சில் (ஐ எம் ஏ) மாநில தலைவர் சி.என்.ராஜா அரசுகள் மீது குற்றச்சாட்டினை வைத்துள்ளார்.
ஈரோடு பழையபாளையம் அருகே இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில், கரோனா தொற்றால் பாதிக்கப்படும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு என சிகிச்சை அளிக்க கரோனா சிறப்பு மருத்துவமனை ஒன்று திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஐஎம்ஏ மாநில தலைவர் சி.என்.ராஜா பங்கேற்று அந்த மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாக்டர்களும் இணைந்து கரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையை தொடங்கி உள்ளோம். தமிழ்நாடு மருத்துவ சங்கத்தின் வழிகாட்டுதலின் படி அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் இங்கு வசூலிக்க இருக்கிறோம். ஏராளமான டாக்டர்களும், செவிலியர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக சிகிச்சை அளிக்க இந்த மருத்துவமனையை நாங்கள் துவங்கி உள்ளோம்.
நாடு முழுவதும் இதுவரை 370 டாக்டர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் இதுவரை 63 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாக்டர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவின் பிரதமரும், தமிழகத்தின் முதல்வரும் அறிவித்த நிவாரணத் தொகையை இதுவரை வழங்கவே இல்லை. அரசு அறிவித்த நிவாரணதொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும் இந்த தொற்றால் உயிரிழந்த டாக்டர்களுக்கு அரசு ராணுவ வீரர்களுக்கு மரியாதை வழங்குவதை போல் உரிய மரியாதயை அவசியம் செய்ய வேண்டும் கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு என்பது தேவையற்றது. மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் நிலை குலைந்து போய்விட்டது. பலவிதமான சிக்கல்கள் இருக்கின்றன. தமிழகத்தில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் அமலில் இருக்கிறது. ஆனால் இதை மேலும் அரசு வலுப்படுத்த வேண்டும். கரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு நிர்ணயித்த கட்டணம் போதுமானதாக இல்லை. அந்த கட்டணத்தை அரசு உயர்த்த வேண்டும்" என்றார்.