திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்துவந்தது. இதனால் பல பகுதிகளில் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது. குப்பைகளை கொட்டுவதற்கு இடம் கிடைக்காமல் பேரூராட்சி நிர்வாகம் திண்டாடி வருகிறது.
இந்நிலையில், வத்தலக்குண்டு பேரூராட்சியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை முழுமையாக அகற்றிய பிறகு கழிவு நீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படும் என பேரூராட்சி தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார். இந்நிலையில் 16வது வார்டு அக்ரஹார பகுதியில் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த குப்பைகளை தனது சொந்த செலவில் அப்பகுதி திமுக கவுன்சிலர் முத்து மாரியம்மாள் அகற்றினார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் வெளியேறாமல் தேங்கிவிட தெரு பொது மக்கள் கவுன்சிலரிடம் முறையிட்டனர்.
முத்து மாரியம்மாள் வெளியூர் சென்றிருந்த நிலையில், தூய்மை பணியாளர்களின் வருகையை எதிர் பார்க்காமல் உடனடியாக களமிறங்கிய கவுன்சிலரின் கணவர் கோபால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று உடனடியாக சாக்கடை அடைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளின் கணவர்களின் அதிகார தலையீடு என ஒருபுறம் குற்றச்சாட்டு எழுந்தாலும் ஆக்கப்பூர்வ பணிக்கான தலையீடு என்பதால் கவுன்சிலரின் கணவரின் இச்செயல் பொதுமக்கள் இடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது.