புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த அக்டோபர் 17- ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் ராஜ்கிரண் என்ற மீனவர் படகை ஆழ்கடலில் இலங்கை கடற்படை மோதி படகை மூழ்கடித்தது. சில மீனவர்கள் உயிர் தப்பினர். எனினும், ராஜ்கிரண் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த நிலையில், உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் உடலையும் அந்த படகில் பிழைப்பிற்காக மீன் பிடிக்கச் சென்று போது இலங்கை கடற்படை கப்பல் மோதி மீனவர் படகை மூழ்கடித்து, அதிலிருந்து சிறை பிடிக்கப்பட்டுள்ள மற்ற இரு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து மூன்று நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜ்கிரண் உடல் இலங்கையிலிருந்து இன்று வியாழக்கிழமை கொண்டு வரப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று அவரது உடல் அனுப்பப்படவில்லை. அதனால் நாளை வெள்ளிக்கிழமை காலை ராஜ்கிரண் உடல் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் கூறப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் ராஜ்கிரண் உடலை பெற்றுக் கொள்வதற்காக இரண்டு படகுகளில் மீனவர்கள் அதிகாலை சர்வதேச கடல் எல்லைக்கு செல்ல ஆயத்தமாகி உள்ளனர். நாளை மதியம் ராஜ்கிரண் உடல் கோட்டைபட்டினம் கடற்கரைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் ராஜ்கிரண் உடலோடு சிறை பிடிக்கப்பட்டுள்ள மற்ற இரு மீனவர்களையும் ஒப்படைக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.