சென்னை கோயம்பேட்டில் வியாபாரிகளுக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் துவங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்த தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றுவருகிறது. கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் மொத்த வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள், ஊழியர்களுக்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் அங்காடி குழு சார்பாக இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுவரை 6,340 பேருக்கு சிறப்பு முகாம் மூலமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒருநாளைக்கு 500 பேருக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் பணியாற்றும் ஊழியர்கள், வியாபாரிகள் தடுப்பூசி போடும்போது கரோனா பரவல் மேலும் குறையும். வியாபாரிகள் அவர்களுடைய ஆதார் அட்டை, அவர்களுக்கான அடையாள அட்டை ஆகியவற்றைக் காண்பித்து தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.