ஆடு திருடிய குற்றச்சாட்டில் சிக்கியவரை பொதுமக்கள் முன் காலால் எட்டி உதைத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் காவிலிபாளையம் பகுதியில் வசித்துவரும் நாகராஜ் என்ற விவசாயியின் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை இருவர் திருட முயன்ற நிலையில் ஊர்மக்கள் இருவரையும் பிடித்து மரத்தில் கட்டி வைத்துகொடூரமாக தாக்கினர். இந்த தாக்குதலில் ஒருவர் தப்பித்துவிட குமார் என்ற நபர் மட்டும் சிக்கிக்கொண்டார். உடனடியாக போலீசாருக்கு தகவலளித்த பொதுமக்கள் அங்கு வந்த சிறப்பு காவல் ஆய்வாளர் முருகேசனிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது குமாரை சிறப்பு காவல் ஆய்வாளர் முருகேசன் பொதுமக்கள் முன்னிலையில் காலால் உதைத்திருக்கிறார். இந்த சம்பவம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்திருந்த நிலையில் இதனை வீடியோவாக பதிவு செய்த இளைஞர்கள் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் காலால் எட்டி உதைத்த சிறப்பு காவல் ஆய்வாளர் முருகேசனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.