திண்டுக்கல்லில் எஸ்.பி. முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். கடந்த 22ஆம் தேதி திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனபட்டியைச் சேர்ந்த நிர்மலா தேவியையும், அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்த ஸ்டீபனையும் இரண்டு கொலைகார கும்பல் கொடூரமாக கொலை செய்து, அவர்களுடைய தலைகளை வெட்டி வீசிவிட்டுச் சென்றனர். அதைக் கண்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்தப் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்தக் கொலைகாரக் கும்பலைப் பிடிக்க எஸ்.பி. சீனிவாசன் ஆறு தனிப்படைகள் அமைத்து, தானும் அதிரடி நடவடிக்கையில் இறங்கி குற்றவாளிகளையும் பிடித்து சிறையில் கம்பி எண்ண வைத்தார்.
அதன் எதிரொலியாக மக்களும் பெரும் நிம்மதி அடைந்தனர். இருந்தாலும் தொடர்ந்து மாவட்ட அளவில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையில் ஈடுபடவும் உத்தரவிட்டார். அதேபோல் தானும் இரவு - பகல் பாராமல் வாகன சோதனைகளிலும் நகரின் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்வதுடன் மட்டுமல்லாமல், கடைகள் முன்பாக தேவையில்லாமல் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என கடைக்காரர்களிடமும் வலியுறுத்திவருகிறார். அதேபோல், பேகம்பூர் பாரைப்பட்டி, நாகல்நகர், கடைவீதி, பழனிரோடு உள்பட சில பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி. சீனிவாசன், அவ்வழியாக வந்த பேருந்துகளையும் தடுத்து நிறுத்தி ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.
அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் பலர் முகக்கவசம் அணியாமல் இருந்ததைக் கண்டு, முகக்கவசம் அணியச் சொல்லி வலியுறுத்தினார். அதேபோல் தேவையில்லாமல் கூட்டம் கூடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துவருகிறார். இப்படி கடந்த ஒரு வாரமாக எஸ்.பி. முதல் டி.எஸ்.பி.கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப். இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் அனைவரும் இரவு - பகல் பாராமல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருவதைக் கண்டு பொது மக்களும் எந்த ஒரு பயமும் இல்லாமல் சகஜ நிலைக்குத் திரும்பிவருகிறார்கள்.