செங்கல் சூளை, மண்பாண்ட தொழில் செய்பவர்கள் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
முன்னதாக சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுத்தான் மண் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்த நிலையில், அதனைத் திருத்தி செங்கல் சூளை, மண்பாண்ட தொழில் செய்பவர்கள் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண் எடுக்க சுதந்திரம் வேண்டும் என பல ஆண்டுகளாக அத்தொழிலில் ஈடுபடுவோர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏரிகளை ஒட்டியப் பகுதிகளில் 1.5 மீட்டர் ஆழம் வரை மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மண் எடுக்கும் இடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வண்ணம் மரங்களை நட வேண்டும். கிராமப்புற சாலையிலிருந்து 10 மீட்டருக்குள்ளும், தேசிய நெடுஞ்சாலை, ரயில் பாதை, ஆறுகளில் இருந்து 50 மீட்டருக்குள்ளும் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.