விழுப்புரம் நகரத்தை பொருத்தவரை நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அதிகாரிகள் காவல்துறை ஒருபக்கம் கடும் முயற்சி எடுத்து வருகிறது. அதே நேரத்தில் இந்த அதிகாரிகளே மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறேன் என்று கூட்டத்தில் நின்று போஸ் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். நகரில், கிராமங்களில் மக்கள் தேவையில்லாமல் நடமாடக் கூடாது என்று ஒரு பக்கம் தடை உத்தரவு போட்டுவிட்டு, அதிகாரிகளே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதாக மக்களைக் கும்பலாக கூட்டுவது ஏன்?
மக்களுக்கு நிவாரணம் அளிப்பதை சம்பந்தப்பட்ட அந்த ஏழை எளிய மக்களிடம் தனித்தனியே சென்று ஒப்படைக்க வேண்டும். இப்படி கும்பலை கூட்டி நிவாரணம் அளிக்கும் போது மக்கள் கூட்டம் சேரவே செய்வார்கள்.
இதன் மூலம் நோய் மேலும் பரவ நாமே வாய்ப்பை உருவாக்குவது போன்று உள்ளது. எனவே மக்களுக்கு உதவி செய்யும் அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் அதை கும்பல் சேர்க்காமல் நேரடியாக பயனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிறார்கள் விழுப்புரம் நகரில் உள்ள சமூக ஆர்வலர்கள்.