தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தவறான செய்திகளைப் பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியைச் சேர்ந்த பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
அண்மையில் மருத்துவ பரிசோதனைக்காக தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 21/06/2022 அன்று மாலை தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், "நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்' என கூறப்பட்டிருந்தது. விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என பல பிரபலங்களும் தங்களது விருப்பங்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் சில யூடியூப் சேனல்களில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி பேசுகையில், ''டிடி இன்ஃபோ என்ற யூடியூப் சேனலும், ஆர்ஆர் நியூஸ் என்ற யூடியூப் சேனலும் விஜயகாந்த் குறித்து தவறான செய்திகளை வெளியிட்டுள்ளனர். இது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. இந்த செய்தி தமிழகம் முழுவதும் எதிரொலித்து, தேமுதிக தொண்டர்கள் என்னிடத்திலும், தலைமை கழக நிர்வாகிகளையும் கைபேசியில் தொடர்பு கொண்டு 'என்ன ஆச்சு என்ன ஆச்சு' என்று கேட்டுக்கொண்டார்கள். அவர்களை எல்லாம் நாங்கள் சமாதானப்படுத்தி, அமைதிப்படுத்தி அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னோம். நேற்று இரவு விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கிறார். தவறான செய்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.