![Sivashankar Baba's court custody extended!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Pph_Szsf_HT3qwoybwXSFPMZvIocWS2vd6fptutdX_Q/1630666402/sites/default/files/inline-images/siva_77_0_0.jpg)
சென்னை கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த சுசில்ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் 16ஆம் தேதி கைது செய்யப்பட்ட போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கைப் போக்சோ பிரிவுக்கு மாற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. பள்ளியில் உள்ள சொகுசு அறைக்கு நேராக அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், ஆபாசமாகப் பேச பயன்படுத்திய பள்ளியின் மெயில் ஐடி, பென் ட்ரைவ், சிடிக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுசில்ஹரி பள்ளியில் 2011, 12, 13 ஆண்டுகளில் படித்த சிறுமிகளை சிவசங்கர் பாபா வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்தாரென விசாரணையில் தெரியவந்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே சிவசங்கர் பாபா குற்றப்பத்திரிக்கையைச் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த 14ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த நிலையில், இன்று சிவசங்கர் பாபா மீண்டும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்நிலையில் அவரது நீதிமன்ற காவலை செப்.17 தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.