அண்மையில் சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, தகாத முறையில் நடந்துகொண்டது தொடர்பான புகார்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள், ஆசிரியர்களால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைப் புகார்களாக தெரிவித்துவருகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து சமூக வலைதளங்களில் அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர்.
முன்னாள் மாணவிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரிக்க தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், நிறுவனர் சிவசங்கர் பாபா, அவரின் வழக்கறிஞர், அதேபோல் பள்ளியின் தலைமை ஆசிரியர், மூன்று ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், 3 ஆசிரியர்கள் என 4 பேர் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். ஆனால், முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. அவரது தரப்பு வழக்கறிஞர் நாகராஜன் என்பவர் மட்டுமே ஆஜராகியிருக்கிறார். இந்தப் புகார் தொடர்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி நேரடியாக விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார். ஆஜரானவர்களுடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுவருகிறது.