நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கர்ணன் பெயரை மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து 1964ஆம் ஆண்டு வெளிவந்த மகாபாரதக் காவியமான கர்ணன் திரைப்படம் மறு வெளியீட்டிலும் இன்றளவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால், அதே பெயரில், (கர்ணன்) தனுஷ் நடிக்க, கலைப்புலி தாணு அவர்கள் தயாரிப்பில் மீண்டும் தற்போது திரைப்படம் தயாராகி வருவது அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். "கர்ணன்” என்ற பெயரை மீண்டும் பயன்படுத்திக்கொள்வதற்கு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அனுமதி அளித்திருப்பது வருந்தத்தக்கது.
பல திரைப்படங்கள் மீண்டும் அதே பெயரில் வெளிவருவது ஒன்றும் புதிதல்ல (உதாரணம்: ஆண்டவன் கட்டளை, பச்சை விளக்கு, ஆயிரத்தில் ஒருவன், எதிர்நீச்சல்). ஆனால், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கர்ணன் போன்ற புராணப் படங்களும், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜசோழன் போன்ற சரித்திரப் படங்களும், கப்பலோட்டிய தமிழன் போன்ற சுதந்திரப்போராட்ட வீரர்களின் படங்களும், அதன் தலைப்பே திரைப்படத்தின் உட்கருத்தைச் சொல்வனவாக, காலத்திற்கும் அழிக்கமுடியாததாகத் திகழ்ந்துகொண்டிருப்பவையாகும்.
சட்டப்படி அல்லது தங்களின் திரைப்பட வர்த்தக சபை விதிகளின்படி இப்பெயர்களை மீண்டும் வைப்பதில் எந்தத் தடையும் இல்லாமல் இருந்தாலும், ரசிகர்கள், மத உணர்வாளர்கள், வரலாற்றை நேசிக்கும் ஆர்வலர்களின் மனம் புண்படும் வகையில், புராணங்களையும், வரலாற்றையும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும், கொச்சைப்படுத்தும் விதத்திலேயே அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
அந்த அடிப்படையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட “கர்ணன்” திரைப்படத் தலைப்பை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை திரும்பப் பெறவேண்டும் என, லட்சோப லட்சம் ரசிகர்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
திரைப்படக் கதைக்குத்தான் பஞ்சம் என்றால், தலைப்பினை வைப்பதற்குக்கூடவா படைப்பாளிகளுக்கு வறட்சி ஏற்பட்டுவிட்டது? இனி வருங்காலத்திலாவது, பழைய திரைப்படங்களின் பெயர்களை மீண்டும் வைத்திட அனுமதி கோரும்போது, எந்திரத் தனமாக முடிவெடுக்காமல், அந்தந்த மொழியின் கலைஞர்கள், அறிஞர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்து அவர்களின் பரிசீலனைக்குப் பிறகு அனுமதித்தால் நன்றாக இருக்கும். எங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.