போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கி நடைபெற்றது. இதன் இறுதி விழா நேற்று(16ந் தேதி) சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், வி.சி.க. தலைவரும், எம்.பியுமான தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நக்கீரன் ஆசிரியர், சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கோபி நயினார், திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக பெற்ற 1 கோடி கையெழுத்து கோரிக்கை அமைச்சர் உதயநிதியிடம் வழங்கப்பட்டது.
அதன் பின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, “இந்த அரசு போதை ஒழிப்புக்கு ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகிறது. அரசு மட்டும் இதை தடுக்க நடவடிக்கை எடுத்தால் போதாது. மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் முயற்சி மேற்கொண்டு போதை ஒழிப்பை கொண்டு வர வேண்டும். போதை பொருள் வழக்கில் கைதானால் மிக எளிதில் ஜாமீன் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இப்போது அரசின் முயற்சியால் அந்த நிலை முற்றிலும் மாறி இருக்கிறது. இந்த கையெழுத்து இயக்கம் எதற்காக கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.