கேரளாவில் ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து தென்மேற்கு பருவமழையானது தொடங்கியது. முன்னதாக முதல் இரண்டு வாரங்களில் மழைப்பொழிவு லேசாக இருந்த நிலையில் தற்போது பருவமழையானது தீவிரமடைந்து இருக்கிறது. வரும் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிதீவிர கனமழை பொழியும் என்பதால் கேரளாவின் இடுக்கி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு அதி தீவிர கன மழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதேபோல் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்திற்கு மழைப்பொழிவு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட இடங்களுக்கு நேற்று அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்புப் படையினர் சென்றுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி, கேரள இடையிலான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் காட்டு யானை ஒன்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. வெள்ளநீரிலிருந்து வெளியேற முடியாமல் யானை அங்கும் இங்கும் அலையும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. யானையை மீட்கும் முயற்சியை வனத்துறை மேற்கொண்டு வருகிறது.வெள்ளப்பெருக்கு காரணமாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.