கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 15 வயதான பள்ளி மாணவி தன் உறவினர் வீட்டில் இருந்து படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் 10 பேர் தனித்தனியாக அந்த மாணவியிடம் வன்கொடுமை செய்து வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் கரோனா நோய் தொற்றால் பள்ளிக் கூடங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதாலும், மாணவியிடம் தவறாக நடந்து கொள்பவர்களுக்கு அது வசதியாகி விட்டது.
அந்த பள்ளி மாணவி தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருந்ததால், கோவை அரசு மருத்துவமனைக்கு அந்த மாணவியை உறவினர்கள் கூட்டிச் சென்றனர். அப்போது அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.
உடனே, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு போன் அடித்த மருத்துவமனை நிர்வாகம், ‘’மேடம்.. பள்ளி மாணவி கர்ப்பமாக இருக்கிறாள். நீங்கள் வந்து விசாரியுங்கள்’’ எனச் சொல்லியுள்ளார்கள். அதிர்ச்சி அடைந்த மகளிர் போலீசார், அந்த மாணவியிடம் விசாரித்ததில், தன்னுடன் படிக்கும் நான்கு மாணவர்கள் என்னிடம் தப்பாக நடந்து கொண்டார்கள். அதை செல்போனில் படம் எடுத்துக் கொண்டு மிரட்டினார்கள்.
என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் சில அண்ணன்களுக்கும் அந்த வீடியோக்களை காட்டி இருக்கிறார்கள். அவர்களும், வீடியோக்களை வெளியில் விட்டு விடுவோம் என மிரட்டி என்னிடம் தப்பாக நடந்து கொண்டார்கள்.. என அந்த மாணவி கதறியிருக்கிறாள். இதைக் கேட்டுக் கொண்ட மகளிர் போலீஸ், 4 பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகிவிட்ட 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.