மதுரை மாவட்டம், புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகளவில் நடந்துவந்தன. குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொள்வதில் பெரும் பங்கு வகிக்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் அப்பகுதியில் அதிகளவில் இல்லாததால், குற்றவாளிகளைப் பிடிப்பது காவல்துறைக்குச் சற்று கடினமாக இருந்துவந்தது.
இதன் காரணமாகவும், தனிப்பட்டவர்கள் அவர்களின் கடை, வீடு உள்ளிட்டவற்றை பாதுகாக்கவும் உறுதுணையாக இருக்கும் சி.சி.டி.வி.களை பொறுத்தச் சொல்லி அப்பகுதி மக்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். இருந்தபோதிலும், அதனை யாரும் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.
இந்நிலையில், மதுரை மாவட்டம், புதூர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்துவரும் பத்மநாதன், அப்பகுதியில் ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு கடையாகத் தினமும் சென்று கண்காணிப்பு கேமரா பொறுத்துவதனால் என்ன பயன் என்பதை எடுத்துச் சொல்லி வந்தார். அவரின் இந்தத் தொடர் முயற்சியால், அப்பகுதியில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகளில் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், புதூர் பகுதியின் புறநகரில் உள்ள குடியிறுப்பு பகுதிகளின் குடியிறுப்பு நல சங்கங்களைச் சந்தித்து கூட்டம் கூட்டி சி.சி.டி.வி.யின் அவசியத்தை உணர்த்தி தெருவெங்கும் கண்காணிப்பு கேமராவை பொறுத்தச் செய்து அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து பத்மநாதனிடம் கேட்டபோது, “சார், பல்வேறு வழக்குகளில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். எளிதாக சீக்கிரம் குற்ற செய்ல்களில் ஈடுபடுவோரை பிடிக்க பெரும் உதவியாக சி.சி.டி.வி. இருக்கிறது. எனவே, சி.சி.டி.விகளை அமைக்க மக்களிடம் அதன் பாதுகாப்பு மற்றும் பயன்களை எடுத்துச் சொல்லி புரிய வைத்தால் கட்டாயம் முன்வருவார்கள் என்று முடிவு செய்து, முதலில் என் சொந்தக் காசில் நோட்டீஸ் அடித்து ஒவ்வொரு கடையாக, வீடாக நானே நேரில் சென்று கொடுத்தேன்.
பின் தினமும் போய் அவர்களிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும் போது, வேறு வழியின்றி கேமரா பொறுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இதுவரை 500க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்தி ஏறத்தாழ புதூர் ஏரியாவையே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டேன். என்னால் முடிந்த மக்கள் சேவை இது” என்றார்.
இதுகுறித்து புதூர் பகுதி கடைக்காரர் ஆனந்த் என்பவர், “காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்வார்கள். ஆனால் மக்கள், போலீஸ் என்றாலே கொஞ்சம் தள்ளித்தான் நிற்பார்கள். ஆனால் இந்த பத்மநாதன் சார் வந்ததற்கு பிறகு உண்மையாகவே காவல் துறை நண்பன்தான் என்பதை எங்களுக்கு உணரவைத்துள்ளார். இப்படிப் பொறுப்புடனும் அக்கரையுடனும் கனிவுடனும் பழகுவது இங்குள்ள வியாபாரிகள் மட்டுமல்ல, மக்களிடமும் காவலர்கள் மீது நன்மதிப்பு ஒரு படி உயர்ந்துள்ளது” என்றார்.