திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்துவந்தவர் வசீம் அக்ரம். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியில் முன்னாள் மாநில துணை செயலாளராக இருந்தார். வாணியம்பாடி நகர் இஸ்லாமிய கூட்டு இயக்கத்தில் உறுப்பினராக செயல்பட்டுவந்தார். வசீம் அக்ரம் ஜீவா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி மாலை 6 மணிக்குச் சென்று தொழுகை முடித்துவிட்டு, தனது 7 வயது குழந்தையுடன் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது சுமார் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து சாலையில் ஓட ஓட விரட்டி சிலர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சரமாரியாக வெட்டினர். பின்னர் குற்றவாளிகள் காரில் ஏறி தப்பி சென்றனர்.
வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து கொலை செய்யப்பட்டவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலையாளிகளைக் காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து நிலையம் அருகில் வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாணியம்பாடி பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் முடப்பட்டன, பதற்றம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் சரக டி.ஐ.ஜி பாபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு), வேலூர் எஸ்.பி. செல்வகுமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்கள். பின்னர் 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிடப்பட்டது.
மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் நடந்த வாகன சோதனையில், வேலூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற காரில் இருந்து சிலர் இறங்கி ஓடுவதைக் கண்ட போலீசார், அந்தக் காரை மடக்கிப் பிடித்தனர். அப்போது அதில் இருந்த வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்கின்ற ரவி, வண்டலூர் பகுதியைச் சேர்ந்த டில்லி குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, வாணியம்பாடியில் கொலை செய்தவர்கள் என்பதைக் கண்டறிந்தனர். தனது கஞ்சா விற்பனையை போலீசாருக்கு காட்டிக்கொடுத்ததால் கோபமான இம்தியாஸ், வசீம் அக்ரமை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் தந்த தகவலின் பேரில் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் உள்ள இம்தியாஸ் என்பவர் கிடங்கில் 10 பட்டா கத்தியைக் கைப்பற்றினர். அதோடு 8 கிலோ கஞ்சா, 10 செல்ஃபோன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் சம்மந்தப்பட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய கார் ஒட்டுநர் உட்பட 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர். வாணியம்பாடியில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமலிருக்க வேலூர் டி.ஐ.ஜி பாபு தலைமையில் 2 எஸ்.பிகள், 1 ஏ.டி.எஸ்.பி, 6 டி.எஸ்.பிக்கள், 15 ஆய்வாளர்கள், 40 உதவி ஆய்வாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.