நாமக்கல் அருகே பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தை தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல மாதங்களுக்கு பிறகு தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி சேர்ந்த கஸ்தூரி என்பவருக்கு கடந்த ஏப்ரல் `4 ஆம் தேதி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே கஸ்தூரிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. தாய் கஸ்தூரி குழந்தையுடன் வீடு திரும்பிய பின் ஏப்ரல் 12ஆம் தேதி குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறி குழந்தையின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர். பிறந்த குழந்தை ஒரு வாரத்தில் உயிரிழந்தது குறித்து சந்தேகமடைந்த சுகாதாரத்துறையினர் எருமப்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்திருந்தனர்.
அதன்பிறகு ஏப்ரல் 14ஆம் தேதி குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஹைதராபாத் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்த ஆய்வின் முடிவுகள் வந்து சேர்ந்தது. அதில் குழந்தை தலையில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தையின் தாய் கஸ்தூரியிடம் எருமப்பட்டி காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மூன்றாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் தலையில் அடித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். அதன்பிறகு அவரை கைது செய்த போலீசார் தாய் கஸ்தூரியை சிறையில் அடைத்தனர்.