அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் தேஜ்வீரின் சிகிச்சைக்கு உதவுங்கள் என கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவு அதிகம் பகிரப்பட்டுவருகிறது. மத்திய ஆப்ரிக்காவில் பரவலாகக் காணப்படும், குழந்தைகளைப் பாதிக்கக்கூடிய 'பர்கிட் லிம்போமா' எனும் புற்றுநோய், இந்தியாவில் மிக அரிதானது. இத்தகைய சூழலில், அந்த நோய் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன் தேஜ்வீர் யாரென விசாரிக்கத் தொடங்கினோம். முடிவில், அவர் சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்பவரின் இளைய மகன் எனத் தெரியவந்தது. தன்னுடைய மகனின் சிகிச்சைக்காக உதவி கோரி பதிவிட்டிருந்த ஷர்மிளாவை மருத்துவமனையில் நேரில் சந்தித்தோம்.
"மூனு வாரத்துக்கு முன்னாடிவரை ஓடிஆடி விளையாடிட்டு நல்லாதான் சார் இருந்தான்... கண்ண மூடி திறந்த மாதிரிதான் இருக்கு... அதுக்குள்ள எல்லாம் இப்படி ஆகிருச்சு..." என தழுதழுத்த குரலில் பேசத் தொடங்கிய ஷர்மிளாவின் கண்களில் கண்ணீர் பொங்கிவழிந்தது. ஆறுதலாக சில வார்த்தைகள் கூறி அவரை ஆசுவாசப்படுத்தினோம். மீண்டும் பேசத்தொடங்கிய ஷர்மிளா, அனைத்தையும் விளக்கிக் கூறினார்.
"நான் ஒரு கல்லூரியில் ப்ரொபசரா வேலை பார்க்கிறேன் சார். மொத்தம் எனக்கு ரெண்டு குழந்தைங்க. சின்னவன் தேஜ்வீர்தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கான். மூன்று வாரத்துக்கு முன்னாடி வயிறும் நெஞ்சும் வலிக்குதுன்னு சொன்னான். நாங்க பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மெண்ட் எடுத்தோம். இருந்தாலும், வயிறு வலி மட்டும் தொடர்ந்து இருந்துச்சு. பிறகு ஸ்கேன் பண்ணி பார்த்தா ரிப்போர்ட்ல கேன்சர்னு வந்துருச்சு. அதுவும் 'பர்கிட் லிம்போமா'னு சொல்லுற அரிய வகை ரத்த புற்றுநோயாம் சார். ஆப்ரிக்காவில்தான் இந்த நோய் அதிகமாக இருக்குதாம். இந்த நோய் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் போய்கிட்டிருக்குது. எதனால இந்த நோய் ஏற்படுதுன்னு இன்னைக்குவரை சைன்டிஸ்ட்டாலயே கண்டுபிடிக்க முடியல. என் பையனுக்கு இப்ப மூணாவது ஸ்டேஜ்ல இருக்குனு சொல்றாங்க. கீமோதெரபி சிகிச்சைதான் பண்ணப்போறோம். கல்லீரல், நுரையீரல் உட்பட நான்கு உறுப்புகளைப் பாதிச்சிருக்கு. ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சு பத்து நாளுக்குமேல ஆகிருச்சு. எங்களோட சேவிங்ஸ் எல்லாம் இதுவரைக்கான ட்ரீட்மெண்ட்டுக்கு செலவு பண்ணிட்டோம். சிகிச்சைக்கு குறைந்தபட்சமே 25 லட்சத்திற்கும்மேல ஆகும்னு சொல்லிருக்காங்க. என்ன பண்றதுன்னு தெரியல. வேற எந்த ஆப்ஷனும் இல்லன்னு தெரிஞ்ச உடனேதான், மக்கள்கிட்ட உதவி கேட்ருக்கோம். நம்ம மக்கள் உதவுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..." எனக் கூறும்போதே மீண்டும் எமோஷனல் ஆனார் ஷர்மிளா.
அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருக்கையில், சைகையால் அழைத்து தனக்கு வாந்தி வருவதாகத் தெரிவித்தான் தேஜ்வீர். வாந்தி எடுத்த பிறகு அவனுக்குத் தேவையான உதவிகள் செய்துகொடுத்துவிட்டு மீண்டும் நம்மிடம் பேச வந்தார். மூச்சுவிட சற்று சிரமப்பட்ட சிறுவன் தேஜ்வீரின் அந்த நிலை நம்மை கண்கலங்க வைத்தது. புற்றுநோய்க்கு முந்தைய தேஜ்வீர் எப்படி எனக் கேட்டோம்.
"ரொம்ப துறுதுறுன்னு இருப்பான் சார். எல்லார்கிட்டயும் அன்பா பழகுவான். கிளாஸ்ல ரெண்டு பசங்களுக்கு இடையில பிரச்சனைனா இவன்தான் ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பான். அவங்க மிஸ்கூட அதை ரொம்ப பெருமையா சொல்லிருக்காங்க. படிப்பு கொஞ்சம் சுமார்தான் சார். ஆனால், ஸ்போர்ட்ஸ்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட். கராத்தேல பிரௌன் பெல்ட்டெல்லாம் வாங்கிருக்கான். இந்தியாவுக்காக நான் ஒருநாள் ஒலிம்பிக்ல கராத்தே விளையாடுவேன்னு அடிக்கடி சொல்வான் சார். அவன் அப்படி சொல்லும்போதெல்லாம், "டேய் ஒலிம்பிக்ல கராத்தேயே கிடையாதுடா”ன்னு அவனோட அண்ணன் கிண்டல் பண்ணுவான். இந்த முறைதான் டோக்கியோ ஒலிம்பிக்ல முதன்முறையா கராத்தேவ சேர்த்தாங்க. அந்த விஷயம் தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டான். இப்ப அவனுக்கு 11 வயசுதான் ஆகுது. இன்னும் நாலு வருஷம் கழிச்சு ஏதாவது பெரிய கராத்தே அகாடெமில அவன சேர்த்துவிடலாம்னு நினைத்திருந்தோம்..." எனக் கூறிக்கொண்டே கராத்தே போட்டிகளில் தேஜ்வீர் வென்றபோது எடுத்த சில புகைப்படங்களை நம்மிடம் காட்டினார்.
அவர் காட்டிய புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, அருகே படுத்திருந்த தேஜ்வீரின் தற்போதைய நிலையைப் பார்த்தபோது இந்தமுறை நாம் எமோஷனல் ஆகிவிட்டோம். நம்மை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்காக இந்த முறை ஷர்மிளா பேசத் தொடங்கினார். "ஸ்கூல்ல யாருக்காது பர்த்டேனு சாக்லேட் கொடுத்தாக்கூட வீட்டுல கொண்டுவந்து எனக்கு, அவங்க அப்பாக்கு, அவன் அண்ணனுக்கு என மூனு பேருக்கும் குடுத்துட்டுதான் சாப்பிடுவான் சார்..." என அவர் கூறிக்கொண்டு இருக்கையிலேயே மீண்டும் வாந்தி வருகிறது என சைகை காட்டி அழைத்த தேஜ்வீர், இந்த முறை நீண்ட நேரம் வாந்தி எடுத்தான்.
அவனை ஆசுவாசப்படுத்திவிட்டு வந்து, "அடிக்கடி வாந்திதான் எடுத்துக்கிட்டே இருக்கான் சார். தொண்டையெல்லாம் இன்ஃபெக்சன் ஆகிருச்சு. கடைசி ரெண்டு நாளா பேசக்கூட முடியல. எல்லாத்தையும் சைகைலதான் சொல்றான். கீமோ பண்ணதுனால இந்த வீக்ல ஹெல்த் கண்டிஷன் இன்னும் கொஞ்சம் டவுன் ஆகும்னு சொல்லிருக்காங்க. ஏற்கனவே டவுன்லதான் இருக்கு... இன்னும் என்ன டவுன்னு எனக்குப் புரியல..." எனக் கூறிய ஷர்மிளாவின் குரலில் தாங்கொணாத் துயரமும் வேதனையும் நிரம்பியிருந்தன.
காலம் செய்யும் கோலம் இத்தனை அபத்தமானதாகவா இருக்க வேண்டும்? வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டால் இளம் வயதில் பாதிக்கப்பட்ட மெஸ்ஸியும், சிறு வயதிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்ட ரொனால்டோவும் விளையாட்டு உலகத்தை இன்று ஆள்வதுபோல, சிறுவன் தேஜ்வீரும் நோயிலிருந்து மீண்டு வந்து சாதனைகள் பல படைக்க பிரார்த்திப்போம்.
சிறுவன் தேஜ்வீரின் சிகிச்சைக்கு உதவ விரும்பினால் கீழ்கண்ட லிங்க்கில் சென்று நிதியளிக்கலாம். அல்லது கீழே குறிப்பிட்டுள்ள அவரது வங்கிக்கணக்கிலேயே நேரடியாக பணம் செலுத்தி உதவலாம். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் சிறுவன் தேஜ்வீரின் உடலில் உள்ள புற்றுசெல்களுக்கு எதிரான ஆயுதமாக செயல்படும்.
மேலதிக தகவல்களுக்கு, ஷர்மிளாவின் கணவரை தொடர்பு கொள்க - 9840880903
GPAY number- 9840880906.
Account number: 90928353883245
Account name: Ms Tejveer
IFSC code: IDFB0020101
Fundraiser link: https://www.impactguru.com/fundraiser/help-ms-tejveer-apl