சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியை புவனகிரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் வாசுதேவன் தலைமையில் 5 ஊராட்சி தலைவர்கள் சந்தித்து மனு அளித்தனர். அதில் சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை மணலூர் பகுதியில் சுத்திகரிப்பு செய்து சிவகாம சுந்தரி பாசன வாய்க்காலில் விடப்படுகிறது சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் கழிவுநீர் முழுவதுமாக பாசன வாய்க்காலில் விடப்படுகிறது.
இதனால் பாசனத்திற்கு செல்லும் நீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் உள்ள கால்நடைகள் குடிநீர் குடிக்க முடியாமல் உள்ளது.
கழிவுநீர் கலப்பதால் தில்லைநாயகபுரம், கீழமூங்கிலடி, தையாகுப்பம், அம்பலத்தாடி குப்பம், அ.மண்டபம், மேல்மாம்பட்டு, சி.முட்லூர், கீழ் அனுவம்பட்டு, அம்பு பூட்டிய பாளையம், நவாப் பேட்டை, சாலக்கரை, ரயிலடி, பு.மடுவாங்கரை ஆகிய கிராமபகுதிகளில் உள்ள பாசனவாய்கால் பாதிக்கப்படுகிறது. எனவே கழிவுநீர் பாசன வாய்க்காலில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இவருடன் தேமுதிக மாவட்ட துணை செயலாளர் பானுசந்தர், ஒன்றிய கவுன்சிலர் லதா ராஜேந்திரன், சி.முட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் வேதநாயகி பஞ்சநாதன், கீழமூங்கிலடி ஊராட்சி மன்ற தலைவர் சுடர்விழி அன்பரசன், மேல் அனுவம்பட்டு தவமணி மருதப்பன், கீழ் அனுவம்பட்டு மாரியம்மாள் ஜெகதீசன், தில்லை நாயக புரம் மகாவதி நாகூரான், கீழ் அனுவம்பட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன், கீழமூங்கிலடி துணைத் தலைவர் தீபா காசி முருகன் உள்ளிட்ட கிராமங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.