Skip to main content

செப்டம்பர் 17 சமூகநீதி நாள்: முதல்வர் அறிவிப்பை வரவேற்ற ராமதாஸ்

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

September 17 Social Justice Day; Ramdoss to welcome Chief Minister's announcement

 

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (06.09.2021) சட்டப்பேரவையில் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி, இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இதனை அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வரவேற்று பேசினார்கள். 

 

இதற்கு வரவேற்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூகநீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

 

1987-ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் நாள்தான், சமூகநீதி கேட்டு ஒருவார தொடர் சாலைமறியல் போராட்டத்தை தொடங்கினோம். அந்த நாளில்தான் சமூக நீதிக்காக போராடிய மாவீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை செப்டம்பர் 17-ஆம் நாள்தான் சமூக நீதி நாள்.  33 ஆண்டுகளாக  செப்டம்பர் 17-ஆம் நாளை சமூகநீதி நாளாக கடைபிடித்து வருகிறோம். அந்த நாளில் சமூக நீதி மாநாடு நடத்தினோம். கடந்த ஆண்டு அதே நாளில்தான் ‘சுக்கா... மிளகா... சமூகநீதி’ நூல் வெளியிடப்பட்டது.

 

தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்திவந்தது. தேர்தல் அறிக்கைகளிலும் வாக்குறுதி அளித்துவந்தது. பா.ம.க. சமூகநீதி நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதில் மகிழ்ச்சி” என்று அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்