தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒருமாத காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், இன்று 259 கல்லூரி விடுதிகளில் 2.59 கோடியில் செம்மொழி நூலகம் அமைக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, ''இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி குறித்து 5 லட்சம் செலவில் புத்தகம் வெளியிடப்படும். நரிக்குறவர், சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஆண்கள்,பெண்களுக்கான திருமண உதவித்தொகை உயர்த்தப்படும். ஆண்களுக்கான திருமண உதவித்தொகை 3,000 ரூபாயாகவும், பெண்களுக்கான உதவித்தொகை 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து கள்ளர் தொடக்கப் பள்ளிகளிலும் முதலாம் வகுப்பில் ஆங்கில மொழி வகுப்புகள் தொடங்கப்படும். கல்வி உதவித்தொகை முதல் பட்டதாரிக்குப் பதிலாக முதல்முறை பட்டதாரி என்ற நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும்'' எனக் கூறியுள்ளார்.