Skip to main content

7 வயது சிறுமியை 10 லட்சம் ரூபாய்க்கு விற்ற பெற்றோர் கைது; வாங்கிய தொழில் அதிபரும் சிக்கினார்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

selling 7-year-old girl for Rs 10 lakh-incident in salem

 

சேலத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு 7 வயது சிறுமியை விலைக்கு வாங்கிய தொழில் அதிபர் மற்றும் குழந்தையை விற்ற பெற்றோர் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு. சேலம் நகர மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மனுவில், அன்னதானப்பட்டியில் வசித்து வரும் தன் மகள் சுமதி, சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணன் (54) என்பவருக்கு தனது 7 வயது பேத்தியை விற்றுவிட்டதாகவும், விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியிருந்தார்.

 

இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர், முதற்கட்டமாக தொழில் அதிபரின் வீட்டில் இருந்த சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது ஒருபுறம் இருக்க, சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் தாயார் சுமதி, உறவினர் ஒருவருடன் பேசும் குரல் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது.

 

selling 7-year-old girl for Rs 10 lakh-incident in salem

 

அந்த உரையாடலில் சுமதி, தன் மகளை 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டதாகவும், பணத்தைத் தன்னுடைய வங்கிக் கணக்கில் போட்டுள்ளதாகவும், அந்த தொழில் அதிபர் மகளை நல்லபடியாக பார்த்துக்கொள்வார் என்றும் கூறுகிறார். இந்த உரையாடல் குறித்தும் காவல்துறையினர் விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

 

சிறுமியை வாங்கிச் சென்ற தொழில் அதிபர் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி இறந்துவிட்டார். மகன்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவருடைய வீட்டில்தான் சுமதி வேலை செய்து வந்துள்ளார்.

 

சுமதியின் 7 வயது மகளைத் தன்னுடனேயே வைத்து வளர்க்க விரும்புவதாகவும், அதற்காக பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வறுமையில் இருந்த சுமதியும், அதற்கு ஒப்புக்கொண்டார். அதன்பிறகே சிறுமியை தொழில் அதிபருடன் அனுப்பி வைத்திருக்கிறார். இதற்காக 10 லட்சம் ரூபாய் சுமதிக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், குழந்தையை வாங்கிச்சென்ற கிருஷ்ணன், சுமதி, இவருடைய கணவர் சதீஷ்குமார் ஆகியோர் மீது குழந்தையை விற்பனை செய்தது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்து, மூவரையும் மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இதுகுறித்து சிறுமியின் பாட்டி சின்னப்பொண்ணு செவ்வாய்க்கிழமை (ஏப். 13) கூறுகையில், ''என் மகளும், பேத்தியும் ஆரம்பத்தில் என்னுடன்தான் தங்கியிருந்தனர். பின்னர் மகள், வீட்டு வேலைக்காகச் செல்லும்போது பேத்தியையும் உடன் அழைத்துச் செல்வார். சில நாட்கள் சுமதி மட்டும் வீட்டுக்கு வந்துவிடுவார். மகள் எங்கே என்று கேட்டால், வேலை செய்யும் இடத்திலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். அங்கேயே தூங்குகிறாள் என்று சமாளித்து வந்தார்.

 

இந்நிலையில்தான் என் பேத்தியைப் பல நாட்களாக வீட்டுக்குக் கூட்டி வராததால் சந்தேகம் அடைந்து விசாரித்தபோது, பேத்தியை கிருஷ்ணனுக்கு விற்றிருப்பது தெரிய வந்தது. பேத்தியைத் தேடி கிருஷ்ணன் வீட்டுக்குப் போனால், குழந்தையைப் பார்க்க அனுமதிக்க மறுத்து துரத்திவிடுவார். பேத்தியை கோவா, ஏற்காடு என பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருப்பதும் தெரிய வந்தது.

 

அதன் பிறகுதான் காவல்துறையில் புகார் அளித்தேன். சைல்டு லைன் மூலம் மூன்று நாளைக்கு முன்பு என் பேத்தியை மீட்டுக்கொடுத்தனர். என் பேத்தியும், 10 வயதான மற்றொரு பேத்தியும் இப்போது காப்பகத்தில் உள்ளனர். இரண்டு குழந்தைகளையும் என்னுடன் அனுப்ப வேண்டும். நானே அவர்களை நன்றாக வளர்த்து ஆளாக்கிவிடுவேன். இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்” என்றார்.

 

இச்சம்பவத்தில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்