சென்னை அமைந்தகரை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏகாம்பர நாதேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 100 ஆண்டுகளாக இயங்கிவருகிறது சீதா கிங்ஸ்டன் ஹவுஸ் மெட்ரிக் பள்ளி. இந்தப் பள்ளியில் 1,500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும், ஏறக்குறைய 60 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது திடீரென இந்தப் பள்ளி வரும் 31ஆம் தேதியுடன் மூடப்படப்போவதாக அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து நேற்று பள்ளி முன் திரண்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்கள் சிலர், “பல வருடங்களாக இந்தப் பள்ளி இயங்கி வருகிறது. இது ஏகாம்பர நாதேஸ்வரர் கோயிலின் சொத்து. அது டி.ஆர்.பி.சி. நிர்வாகத்திடம் வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டு தற்போது வரை அந்தப் பள்ளி நடத்திவரப்பட்டது. இந்த வாடகை ஒப்பந்தம் கடந்த 99ஆம் வருடத்தோடு முடிவுக்கு வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அரசு அந்த இடத்திற்கான வாடகையை உயர்த்தியது. இது தொடர்பாகப் பள்ளி நிர்வாகமும், இந்து அறநிலையத் துறையும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு ஏறக்குறைய 20 வருடங்களாக நடந்து வந்தது. தற்போது திடீரென பள்ளி நிர்வாகம் தரப்பிலிருந்து, ‘வரும் 31ஆம் தேதியுடன் பள்ளி மூடப்படுகிறது. மாணவர்கள் அவர்களின் ஆவணங்களைப் பெறவும், மற்ற சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ளவும் பள்ளிக்கு வாருங்கள்’ எனக் குறுஞ்செய்தி வந்தது. இவர்களின் இந்தத் திடீர் முடிவால், குழந்தைகளின் பள்ளிப் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
அதற்காக 23.05.21 பள்ளிக்கு வந்து 'ஏன் பள்ளியை மூடுகிறீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது?' எனக் கேட்க வந்தோம். ஆனால், பள்ளி நிர்வாகம் எங்களைச் சந்திக்கத் தயாராக இல்லை. அதனால், போராட்டத்தில் ஈடுபட்டோம். அதே வேளையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தச் சாலை வழியாகத்தான் சென்றார். அவரது கவனத்திற்குச் சென்றால் ஏதாவது விடியல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், சரியாக அவரது வாகனம் வரும்போது, காவல்துறையினர் எங்களை வெளியே அனுமதிக்காமல், அவர்களின் வாகனங்களைக் கொண்டு நாங்கள் கூட்டமாக நின்று போராட்டம் நடத்துவதையும் மறைத்தனர். இதனால், எங்கள் போராட்டம், எங்கள் குழந்தைகளின் படிப்பு தொடர்பான பரிதவிப்பு என எதுவும் வெளியே தெரியாமல் போனது. விரைவாக இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு, ஏதாவது செய்ய வேண்டும். அல்லது குழந்தைகளின் படிப்பையும் எதிர்காலத்தையும் கவனத்தில் கொண்டு அரசே இந்தப் பள்ளியை ஏற்று நடத்தவேண்டும் ” என்கிறார்கள் வேதனையுடன்.