பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக பேசிவரும் சீமான், திருமாவளவன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என பாஜகவின் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா, ''தீர விசாரித்து, ஆய்வு செய்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் அதன் தோழமை அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு 120 கோடி ரூபாய் கணக்கில் வாங்கி அதை வித் ட்ராவ் செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கொடுத்துள்ளனர் என்ற ஆதாரங்களைத் திரட்டி அந்த அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கொலை மற்றும் பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்ட காரணத்தினால் இந்த எட்டு இயக்கங்களும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரிப்பது அல்லது அதற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக பேசி வரும் சீமான், திருமாவளவன் ஆகியோரை போலீசார் கைது செய்ய வேண்டும். யாசின் மாலிக் என்பவரை தமிழகத்திற்கு கூட்டி வந்து கூட்டம் போட்ட தேச துரோகி சீமான் சொல்கிறார் நான் திருமாவளவனுக்கு துணை இருப்பேன் என்று. உங்கள் அரசை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால் உடனடியாக சீமானையும், திருமாவளவனையும் கைது செய்ய வேண்டும். இப்படித்தான் ஸ்டாலினுக்கு நிறைய பேர் கொம்பு சீவி விடுவர். பாவம் ஸ்டாலின் அப்பாவி. அவர் என் நண்பர் தான் அவருக்கு அகட விகடம் தெரியாது. அடுத்தவர்கள் கொம்பு சீவி விட்டால் சரி என்று சிலுப்பி பார்ப்பார். எனவே தேச துரோக பயங்கரவாதிகளுக்காக யாரும் கீழே இறங்கக் கூடாது'' என்றார்.