முன்னாள் பிரதமர் ராஜீவ்கந்தி கொலை வழக்கில் கைதாகி இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் அதற்கான அதிருப்தியை தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசியிருந்தது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், 'சீமான் ஒரு பாலியல் குற்றவாளி' என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்திருந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் இதுகுறித்து கேள்வி எழுப்பட்டபோது, அதற்கு பதிலளித்த சீமான் ''நான் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதை அவர் அருகிலிருந்து பார்த்தாரா? அவரை தங்கச்சி என்பதைத்தவிர மறுவார்த்தை ஏதாவது பேசியுள்ளேனா? நான் எடுத்து வைக்கும் அரசியல் குறித்து சரியான பெண் மகளாக இருந்தால் பாராளுமன்ற உறுப்பினராக பதில் சொல்லணும்'' என்றார்.
இதற்கு பதிலளித்துள்ள ஜோதிமணி, ''சீமான் மீது நான் சொன்ன குற்றச்சாட்டு நானாக சொன்னது கிடையாது. விஜயலட்சுமி ஆதாரத்தோடு பொதுவெளியில் வைத்த குற்றச்சாட்டு. அதற்கு அவர் புகாரும் கொடுத்துள்ளார். அந்த பாலியல் குற்றச்சாட்டு உண்மையில்லை என்றால் ஏன் சீமான் விஜயலட்சுமி மீது மானநஷ்ட வழக்கு போடக்கூடாது. இது சீமானுடைய தரம். நான் மட்டுமல்ல பல ஆண் தலைவர்கள் சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். அன்றெல்லாம் சீமான் அவர்களை எதிர்த்துப் பேசவில்லை. நான் ஒரு பெண் என்பதால் பயந்து பதுங்கிவிடுவார்கள் என சீமானை போன்ற ஆட்கள் நினைக்கிறார்கள். சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்றார்.