சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11/06/2022) காலை 11.30 மணியளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழக காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு மற்றும் மருத்துவத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் இதுவரை கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாகக் காணப்பட்டாலும், உயராமல் கட்டுப்படுத்த வேண்டும். திருவிழாக்கள், திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோரில் தொற்று ஏற்பட்டால் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். தொற்று பாதுகாப்பு நடைமுறைகளான பரிசோதனைகள், தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாகப் பின்பற்றிட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் மொத்தம் 1.63 கோடி பேர் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை. கரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்" என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.