9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாகவும், நேற்று 9 ஆம் தேதி இரண்டாம் கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காணை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சோழன் பூண்டி கிராமத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வாக்குச்சாவடி முன்பு ஓட்டு கேட்டுக் கொண்டிருந்தனர். போட்டி வேட்பாளர்கள் இதனைத் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கல்வீசித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவரின் மண்டை உடைந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர்.
செஞ்சி அருகே உள்ள அன்னியூர் கிராமத்தில் மாலை 5 மணிக்கு மேல் ஓட்டு போட வந்த பொதுமக்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாக்குச் சாவடி மீது சரமாரியாகக் கல்வீசித் தாக்கியுள்ளனர். இதனால் அங்குப் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து விக்கிரவாண்டி தாசில்தார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா மற்றும் போலீசார் அந்த கிராமத்துக்குச் சென்று நிலைமையைச் சமாளித்தனர்.
தியாகதுருகம் ஒன்றியம் வாரியங்காவல் ஊராட்சி தலைவர் பதவிக்கு 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் ஒரு பெண் வேட்பாளர் அங்கம்மாள். இவர் தனது குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு தமது வாக்கை அளிக்கச் சென்றுள்ளார். அப்போது இவரது பெயர் வரிசையில் வாக்காளர் பட்டியலில் சீல் குத்தப்பட்டு அது தபால் வாக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர் தனது வாக்கைச் செலுத்த முடியாதா எனக் கேட்டு வேட்பாளர் அங்கம்மாள் கதறி அழுதுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலறிந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை செய்ததில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் மணிமேகலை என்பவர் தபால் வாக்குப் பதிவு செய்த படிவத்தில் வரிசை எண்ணைத் தவறுதலாக அங்கம்மாள் வாக்காளர் வரிசை எண்ணைக் குறிப்பிட்டதால் மணிமேகலை என்பதற்குப் பதிலாக அங்கம்மாள் என்பவரின் வரிசையில் மாறி பதிவு செய்துள்ளார். இதையடுத்து அங்கம்மாள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டனர்.
மூங்கில்துறைப்பட்டு ஊராட்சி தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே கிராமத்தைச் சேர்ந்த 35 வயது மேகராஜ் என்பவர் அவரது குடும்ப உறுப்பினர்கள் சுமார் 11 பேருடன் வாக்களிக்க வந்தார். அப்பொழுது வாக்குச்சாவடி அலுவலர்கள் அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த வேதனை தாங்க முடியாமல் மேகராஜன் தன் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்குப் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் மேகராஜனை சமாதானப்படுத்தி பெட்ரோல் பாட்டிலை வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி வைத்தனர்.
சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கூகையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வீரபயங்கரம் வாக்குச்சாவடி பணியிலிருந்த ஊழியர்கள் சிறுவலூர் ஆறுமுகம், நமச்சிவாயபுரம் தனபால், அத்திப்பாக்கம் சிலம்பரசன், அசகளத்தூர் ஆறுமுகம், தியாகதுருகம் தமிழரசன், சின்னசேலம் மணி, கடுவனூர் ஜெயராமன் உள்ளிட்ட ஆகிய எட்டு பேர் வாக்குச்சாவடி மையத்தில் பணியிலிருந்தனர். மாலை வாக்குப்பதிவு முடிந்தது வாக்குப் பெட்டி எடுத்துச் செல்வதற்குள் இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. இதனால் வாக்குச்சாவடி அருகிலிருந்த டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின் கசிவால் வாக்குச்சாவடி மையத்திலிருந்த மின்சார சுவிட்ச் போர்டுகள் வெடித்து சிதறியுள்ளது. இதில் ஏற்பட்ட கரும்புகை காரணமாக உள்ளே இருந்த ஏழு அலுவலர்களும் புகையில் சிக்கி மயக்கமடைந்துள்ளனர். இருந்தும் சீல் வைக்கப்பட்ட ஓட்டுப்பெட்டி எந்த சேதாரமும் இல்லாமல் தப்பியது. இதில் அலுவலர்களுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தகவலறிந்த சின்னசேலம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிவேல் ஆகியோர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்குச் சென்று பாதிக்கப்பட்ட அலுவலர்களை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கிருந்த வாக்குப்பதிவு செய்யப்பட்ட பெட்டி பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. இப்படிப்பட்ட சில சில சம்பவங்களுடன் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது.