தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 23,459 ஆக பதிவாகியுள்ளது. இன்று கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 23,438 பேர் தமிழகத்திலும், மீதம் உள்ள 21 பேர் வெளிநாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் முழு முடக்கம் என பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் இனி பொதுஇடங்களில் மாஸ்க் அணியவில்லை என்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரித்திருந்தது. அதேபோல் தனியார் நிறுவனங்கள், கடைகள் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பொழுதுபோக்கு இடமான விஜிபி மரைன் கிங்டம்-மிற்கு கரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக மாநகராட்சி அதிகாரிகள் பூங்காவை மூடி சென்றதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விஜிபி மரைன் கிங்டம் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட விளக்கத்தில், 'தங்கள் நிறுவனம் கரோனா விதிகளை மீறவில்லை. வரும் சுற்றுலா பயணிகளுக்கு சரியான கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிதான் வருகிறோம். எனவே சீல் வைக்கப்பட்டது என்பது தவறானது. கரோனா பரவல் நேரத்தில் பூங்காவை தற்காலிகமாக மூட வேண்டும் என கேட்டுக்கொண்டதின் பேரில் தற்காலிகமாக மூடியுள்ளோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.