Skip to main content

எஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தியும், பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்கை திரும்பப்பெறக் கோரியும் எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்

Published on 03/05/2018 | Edited on 03/05/2018
sdpi

 

பெண் பத்திரிகையாளர்களை இழிவுப்படுத்திய எஸ்.வி.சேகரைக் கண்டித்தும் போராட்டத்தில்  ஈடுபட்ட செய்தியாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தெகலான்பாகவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் பத்திரிகையாளர்கள் தீக்கதிர் குமரேசன், பீர் முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

 

sdpi1

 

பெண் நிருபரைக் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கேட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பெண் செய்தியாளர்களைப் பற்றி கேவலமான ஒரு பதிவை வெளியிட்டார். இதனிடையே தொடர்ந்து பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக சித்தரித்து எழுதி வரும் எஸ்.வி.சேகர் மற்றும் எச். ராஜாவுக்கு எதிராகப் பத்திரிகையாளர்கள் கொந்தளித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 


இந்நிலையில் இன்று(மே.03) மாலை 04 மணியளவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து “பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த எஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தியும், பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்கை திரும்பப்பெறக் கோரியும்” எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. 

 

இந்தக் கண்டன போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, தீக்கதிர் பத்திரிக்கை ஆசிரியர் குமரேசன், இப்போது டாட்காம் ஆசிரியர் பீர் முஹம்மது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரா.சிந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாவலன்,கேம்பஸ் பிரண்ட் நிர்வாகி கஸ்ஸாலி, மநீதி அமைப்பின் செல்வி உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். 

 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் உமர் பாரூக்,தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சலீம் ,தென் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் அன்சாரி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன், வட சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது பிலால், தென் சென்னை மாவட்ட துணைத்தலைவர்கள் அப்துல் மஜீத், ராவுத்தர், செயலாளர் ஃபைரோஸ் பாபா, பொருளாளர் சுஜாவுதீன் உட்படக் கட்சியின் மாவட்ட, தொகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் எனப் பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி உறுதி? - வெளியான புதிய தகவல்! 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
ADMK DMDK Alliance Confirmed New information released

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது. அதே சமயம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தே.மு.தி.க. சார்பாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் அ.தி.மு..க துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் மற்றும் புதுவை 40 மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வரும் 24 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

ADMK DMDK Alliance Confirmed New information released

இந்நிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி நாளை (20.03.2024) உறுதியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிவில் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, தொகுதி உடன்பாடு கையெழுத்தாக உள்ளது. அப்போது புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியும் ஒதுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகச் சென்னையில் எடப்பாடி பழனிசாமி உடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய பா.ஜ.க. சதி? - ஆர்ப்பாட்டத்தை அறிவித்த திருமாவளவன் எம்.பி.

Published on 18/02/2024 | Edited on 19/02/2024
V.C.K announced the demonstration

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய பா.ஜ.க அரசு சதி செய்வதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுவதற்கு பாஜக அரசு சதி செய்கிறது என்ற ஐயம் நாடு முழுவதும் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் துணை போகிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே, ‘நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்’ என வலியுறுத்தி பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதில் எளிதாக முறைகேடு செய்ய முடியும்; ஆளும் கட்சி தான் விரும்பிய வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று வல்லுநர்கள் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். மக்களுடைய சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் பாஜக அரசும் செயல்பட்டு வருகிறது. அதற்குத் தேர்தல் ஆணையமும் துணை போகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாக உள்ள தேர்தல் முறையைச் சிதைப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது. எனவே, வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக்கூடாது. மாறாக, எல்லா வாக்குப்பதிவு எந்திரங்களோடும் ஒப்புகைச் சீட்டினைப் பெறும் எந்திரமும் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான், வாக்காளர் தான் விரும்பிய சின்னத்தில் வாக்களித்த பின்னர், தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள முடியும். அந்த ஒப்புகைச் சீட்டினை வாக்குப் பெட்டியில் போடுதல் வேண்டும். அவற்றை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்.  

V.C.K announced the demonstration

இந்த கோரிக்கையைத்தான், ‘இந்தியா கூட்டணி’ கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதே கருத்தை முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி உட்பட பல அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் இதற்காக தலைநகர் டெல்லியில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தை பல சிவில் சமூக அமைப்புகளும் ஆதரித்து பல்லாயிரக்கணக்கில் திரண்டு தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். ஆனால், பாஜக அரசு அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து அதிகாரத்துவ மமதையோடு நடந்து கொள்கிறது.

தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் ரத்து செய்து தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஒரு அமைச்சரை நியமித்துக் கொள்ள வகை செய்யும் வகையில் புதிய சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான 'பெல் நிறுவனத்தின்' இயக்குநர்களாக பாஜகவினரே நியமிக்கப்பட்டிருக்கின்றனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாகத் தமது கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட போதும் இந்திய தேர்தல் ஆணையம் அவர்களை சந்திக்க மறுத்து வருகிறது. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தொடர்பாக வெளியிடப்படும் உண்மைகளை மக்களுக்குத் தெரியாமல் மறைக்கும் விதமாக அவற்றை சமூக ஊடகங்களிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கி வருகிறது.

V.C.K announced the demonstration

கடந்த தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்த எண்ணிக்கைக்கும் ஒப்புகை சீட்டில் வந்த எண்ணிக்கைக்கும் பல இடங்களில் வேறுபாடுகள் இருந்தன. அதற்கான காரணம் தேர்தல் ஆணையத்தால் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. லட்சக்கணக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காணாமல் போய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதைப் பற்றியும் தேர்தல் ஆணையமோ, ஒன்றிய அரசோ விளக்கம் எதையும் அளிக்கவில்லை. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் பயன்படுத்தப்படும் ‘சிப்’பில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வெளியிலிருந்து மாற்றி அமைக்க முடியும். அதன் மூலம் தேர்தல் முடிவுகளை மாற்ற முடியும் என்பதை வல்லுநர்கள் நிரூபணம் செய்துள்ளனர். 

இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக நடத்தப்படும் தேர்தல் முறை மீது மக்கள் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக் கூடாது. வாக்குப்பதிவு எந்திரங்கள் எல்லாவற்றோடும் ஒப்புகைச் சீட்டு கருவியை இணைக்க வேண்டும்; வாக்களித்ததும் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒப்புகைச் சீட்டினைத் தனியே ஒரு பெட்டியில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அந்த ஒப்புகைச் சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என எல்லோரும் வலியுறுத்துகின்றனர். ஆனால் பாஜக அரசாங்கமோ, தேர்தல் ஆணையமோ இதற்கு எந்த பதிலையும் கூறவில்லை. 

‘இந்தத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்’ என்று பிரதமர் மோடியும் பாஜகவினரும் கூறி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், 400 இடங்களில் வெல்வோம் என்று அவர்கள் கூறுவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அவர்கள் முறைகேடு செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது. பாஜகவின் இந்த சதித் திட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் துணை போகக்கூடாது. 100 சதவீதம் ஒப்புகைச் சீட்டை எண்ணித் தேர்தல் முடிவை அறிவிப்போம் எனத் தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

V.C.K announced the demonstration

இதனை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 23-02-2024 ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகளும், சனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இந்திய தேர்தல் முறையைப் பாதுகாப்பது தான் இந்திய சனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படையாகும். எனவே, நேர்மையாகத் தேர்தல் நடத்த வலியுறுத்துவோம்! பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிப்போம்! என சனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.