இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
பெரும்பாலான மாநிலங்களில் இரவு ஊரடங்கும், பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பால் 10 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே இறுதியிலும், 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதத்திலும் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமா? என்று கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ப்ளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கவுள்ளது. முதலாவது தேர்வுக்கான தேதியை மட்டும் மாற்றி இதர தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். தமிழகத்தில் மே 3- ஆம் தேதி நடக்கவிருந்த ப்ளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31- ஆம் தேதி நடைபெறும். இதர தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளிலேயே நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 2- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மே 3- ஆம் தேதிக்கு நடக்கவிருந்த தேர்வு மே 31- ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மே 3- ஆம் தேதி தொடங்கி மே 21- ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் தேர்வு மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.