
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இன்று (28/11/2021) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிக கனமழை பெய்யலாம்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் இன்று கனமழை பெய்யலாம். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நவம்பர் 30- ஆம் தேதி முதல் மழை குறைய வாய்ப்புள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த கடல் பகுதிகளுக்கு வெல்ல வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி, காரைக்காலில் மழை காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.