திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில், இன்று (07.08.2021) காலை பள்ளி ஊழியர்கள் வழக்கமாக பணிக்குச் சென்றபோது, அறையில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்ததுடன், சிசிடிவி கேமராவின் ஒயர்களும் அறுந்து கிடந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், சம்பவம் குறித்து மணப்பாறை போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சென்று பார்த்தபோது, ஒரு அறையின் ஜன்னல் கம்பியை மர்ம நபர்கள் அறுத்துவிட்டு, பின்னர் அறைக்குள் சென்று அங்கிருந்த சிசிடிவி கேமராவை உடைத்ததோடு, மேஜை ட்ராயரில் வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட்டிஸ்க்கை கழட்டி எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. ஹார்ட்டிஸ்க் ஒயர்கள் மற்றும் ஜன்னல் கம்பியும் அருகில் இருந்த காட்டுப்பகுதியில் கிடந்தன.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள், தங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் இருக்க ஹார்ட்டிஸ்கை தூக்கிச் சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மணப்பாறையில் தனியார் பள்ளியில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.