
பூந்தமல்லியில் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தின் மீது ஏறி கூச்சலிட்டதோடு, தொடர்ந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே அச்சத்தையும், இடையூறையும் ஏற்படுத்தியது.
சைதாப்பேட்டையிலிருந்து வெள்ளவேடு செல்லும் அரசு பேருந்து கல்லறை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. அப்பொழுது அறிஞர் அண்ணா பள்ளியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பேருந்தின் மேற் கூரையின் மேல் ஏறிக்கொண்டு கூச்சலிட்டு அங்கிருந்த பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ காட்சிகளாக பதிவு செய்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே 'பஸ் டே' போன்ற நிகழ்வுகளில் பள்ளி மாணவர்கள் ஈடுபடக்கூடாது, படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என அறிவுறுத்தி இருந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.