உயிர்கள் விஷயத்தில் அரசு மருத்துவமனைகளும் அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் அலட்சியமாக நடந்துகொள்கின்றனர் என்பது தமிழகத்தில் பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில் சாத்தூர் அரசு மருத்துவமனையின் பெயர் அல்லோகல்லோலப்பட்டது. இதுவும் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரம்தான். அதனால், சாத்தூரை அடுத்துள்ள ஏழாயிரம்பண்ணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஏழாயிரம்பண்ணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 7 மணிக்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார் முனீஸ்வரி. நண்பகல் 12 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு, குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்றும் மதியம் 1 மணிக்கெல்லாம் குழந்தை பிறந்துவிடும் என்று அரசு மருத்துவர் தெரிவித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.

அதனால், மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர்களே பிரசவம் பார்த்தி ருக்கின்றனர். குழந்தை இறந்துவிட்டது. அதனால் ஆத்திரமடைந்த முனீஸ்வரியின் உறவினர்கள், ஸ்கேன் செய்தபோது ஆரோக்கியமாக இருந்த குழந்தை, பிரசவம் பார்த்த செவிலியர்களின் கவனக்குறைவால்தான் இறந்தது என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

குழந்தை இறந்தது குறித்து முனீஸ்வரியின் உறவினர் வெயில்முத்து “இந்த ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் 12 மணிக்கு வந்து பார்த்துட்டு 12.10-க்கெல்லாம் வீட்டுக்கு போயிட்டாங்க. முனீஸ்வரிக்கு பிரசவம் பார்த்தப்ப டாக்டர் இல்ல. நர்ஸ்தான் பிரசவம் பார்த்தாங்க. டாக்டருங்க பெயரளவுக்குத்தான் வர்றாங்க. போறாங்க. அரை மணி நேரத்துக்கு மேல இங்கே இருக்கிறதில்ல. இதே மாதிரி எங்க ஊருலயும் (மஞ்ச ஓடைப்பட்டி) 4 குழந்தைங்க செத்துப்போச்சு.

அந்த 4 குழந்தைங்க உசிர திருப்பிக்கொடுக்க முடியுமா? டாக்டர் மீதும் நர்ஸ் மீதும் நடவடிக்கை எடுக்கணும். இனியும் இந்த மாதிரி பிரச்சனை வரக்கூடாது. கோவில்பட்டி மலர் ஸ்கேன்லதான் ஸ்கேன் எடுக்கணும். இல்லைன்னா பிரசவம் பார்க்க முடியாதுன்னு சொல்லுறாங்க. கோவில்பட்டியில் இருக்கிற மலர் ஸ்கேனுக்கும் ஏழாயிரம்பண்ணையில் இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எதுவும் லிங்க் இருக்கா? இதையெல்லாம் துறை ரீதியா விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்.” என்றார் ஆதங்கத்துடன்.
“வளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே தமிழக அரசின் லட்சியம்” என்று பெருமிதமாகப் பேசுகிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அமைச்சர் பேச்சில் காட்டும் வேகத்தை, சுகாதாரத்துறை செயலில் காட்டுவதில்லை என்பதே நிதர்சனம்.