உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள தேசிய நிபுணர் குழு பரிந்துரைகளை அளிக்கும்வரை தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்குத் தேவையான ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகள் ஆகியவை கிடைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை என வெளியான செய்தி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (11.05.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், சுகாதாரத்துறையின் கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்தார். அவர், தமிழகத்தில் ஏற்கனவே 44 ஆயிரத்துக்கும் அதிகமான ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 12,500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உருவாக்கப்பட்டு, அதில் 5,592 படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், மீதமுள்ளவை மே 15க்குள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார். பிரதமருக்கு கடிதம் எழுதிய பின், தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 419 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் தமிழகத்திற்கு தேவையான ஆளவு 475 டன்னாக உள்ளதால் இதுவும் பற்றாக்குறையாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஊரடங்கிற்குப் பிறகும் கரோனா பரவல் குறையாவிட்டால் மே மாத இறுதியில் ஆக்சிஜன் தேவை 800 டன்னாக இருக்கும் எனத் தெரிவித்தார் அரசு தலைமை வழக்கறிஞர். 3 லட்சத்து 50 ஆயிரம் குப்பி ரெம்டெசிவர் மருந்துகள் கோரிய நிலையில், 2.05 லட்சம் குப்பிகள் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையங்கள் துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தடுப்பூசி மருந்தைப் பொறுத்தவரை 76.99 லட்சம் டோஸ்கள் அனுப்பப்பட்டு, 64.13 லட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக 13.85 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சப்ளைக்கு ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், 5 லட்சம் டோஸ்கள் பெறப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில் சித்தா, ஆயுர்வேதா மருத்துவ மையங்கள் துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து, ரெம்டெசிவிர் மருந்து சப்ளை தொடர்பாக பரிந்துரைகளை வழங்க உச்ச நீதிமன்றம் தேசிய நிபுணர் குழுவை அமைத்துள்ளதாகக் குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலையில் மே 15ஆம் தேதி முதல் 40 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என விளக்கினார். தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கரோனா பரவல் குறையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல புதுச்சேரி அரசுத் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் மாலா, அங்கு ஆக்சிஜன் போதுமான அளவில் இருப்பதாகவும், படுக்கைகள், மருந்துகள் போதுமான அளவில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர்கள் ஆர். ஸ்ரீதர், சி. கனகராஜ், எம்.எஸ். கிருஷ்ணன், கௌதம், பிரகாஷ், பி. வில்சன் ஆகியோர், “படுக்கை குறித்த விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும்; புதுச்சேரியில் இரண்டு மருத்துவமனைகள் மட்டுமே உள்ளதால், ஆரம்ப சுகாதார மையங்களைப் பயன்படுத்த வேண்டும்; முழு ஊரடங்கு சற்று நம்பிக்கை அளித்தாலும் பதற்ற நிலையைக் கட்டுப்படுத்தும் குழுக்களை மண்டல வாரியாக உருவாக்க வேண்டும்; முதல் அலையைப் போல கிருமிநாசினி பணிகள் நடைபெறவில்லை; ரெம்டிசிவிர், அசிலிசுமார் மருந்துகளைத் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும்; 12 மாவட்டங்களில் சித்த முறை சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்; செங்கல்பட்டு மற்றும் குன்னூர் தடுப்பூசி உற்பத்தி மையங்களைத் துவங்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர்.
இதற்குப் பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், “செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர டெண்டர் கோரப்பட்ட நிலையில், எவரும் விண்ணப்பிக்காததால், டெண்டர் தேதி இம்மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், குன்னூர் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் பாக்டீரியாவுக்கு மட்டும் மருந்து தயாரிக்கப்படுவதால், அங்கு கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய இயலாது” எனக் குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அரசு, சுகாதாரத்துறைச் செயலாளரை மாற்றாமல் கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதாக கூறி, தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்தனர்.
மேலும், ராணுவ தளவாட ஆராய்ச்சி மையமான டி.ஆர்.டி.ஓ.வின் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதியை தமிழகத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழு பரிந்துரை அளிக்கும்வரை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து, ரெம்டெசிவிர் மருந்துகள் சப்ளைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மூன்றாவது அலை தாக்கும் என்ற அச்சம் நிலவுவதால் மத்திய, மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால், மருந்துகளை நேரடியாக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கலாம் எனத் தெரிவித்து, விசாரணையை மே 12ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.