நாளை மறுநாள் (27/01/2021) சசிகலா விடுதலையாவது உறுதியானதாக சிறைத்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் சசிகலாவின் தண்டனை காலம் நிறைவடையும் நிலையில், ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாவார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கரோனா உறுதியான நிலையில் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அவர் ஆறாவது நாளாக சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகும் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் சசிகலா விடுதலையாவதில் தாமதம் ஏற்படும் எனக் கூறப்பட்ட நிலையில், சிறைக் கட்டுப்பாட்டிலிருந்து சசிகலாவை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். அதன்படி, ஜனவரி 27- ஆம் தேதி மருத்துவமனையில் சசிகலாவிடம் கையெழுத்துப் பெற்று, அவரை முறையாக விடுவிக்க உள்ளதாக சிறைத்துறையின் அதிகாரப்பூர்வ தகவல் கூறுகிறது.
சசிகலாவை தொடர்ந்து கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இளவரசியும், சிறையில் உள்ள சுதாகரனும் அடுத்தடுத்து விடுதலையாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.